இரம்யா ரவீந்திரன்

பேரவையின் செயலாளர் வேட்பாளர்


என்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் இந்த இணைய தளத்தில் உள்ளது - www.ramya4fetna.com

Hero Image
Image

என்னைப் பற்றி:

கடலூரில் பிறந்து வளர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பும், முதுகலை படிப்பை ஓஹையோ மாநிலத்தில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகத்திலும் படித்து முடித்தேன். தற்சமயம் வட கரோலைனா மாநிலத்தில் உள்ள சார்லட் நகரில் வசிக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன்.

2022 முதல் 2024 ஆண்டுகளில் பேரவையின் செயற்குழுவில் இயக்குநராக பணியாற்றினேன். பேரவை அருவி இதழின் முதன்மை ஆசிரியராகவும். பேரவை இலக்கிய வினாடி வினா குழுவின் தலைமைப் பொறுப்பிலும், பேரவை இலக்கியக் குழுவில் உறுப்பினராகவும், 2020ஆம் ஆண்டு முதல் பல்வேறு பேரவை விழா குழுக்களிலும் பங்களிப்பு செய்திருக்கிறேன்.

பேரவையில் பணியாற்றிய குழுக்கள்

2026- பேரவையின் தமிழ்ச்சங்க இடைமுகக் குழு

2022-2024 - பேரவையின் இயக்குநர் மற்றும் பேரவை செயற்குழு உறுப்பினர்

2022-2024 - பேரவையின் அருவி இதழ் தலைமை மற்றும் முதன்மை ஆசிரியர்

2022-2024 - பேரவையின் இலக்கிய வினாடி வினா குழு தலைமை

2024 - பேரவையின் ஆற்றல் மிகு பெண்கள் குழு உறுப்பினர்

2024 - பேரவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு(Programming committee) உறுப்பினர்

2024 - பேரவை மலர்க் குழு உறுப்பினர்

2023 - பேரவை மலர்க் குழு துணைத் தலைமை

2022 - சங்கங்களின் சங்கமம் குழு உறுப்பினர்

2020-2024 - பேரவை இலக்கியக் குழு உறுப்பினர்

எனது பணிகள்:

பேரவையின் அருவி குழுத் தலைமை பொறுப்பினை முன்னெடுத்து திறம்பட செயல்பட்டேன். முந்தைய ஆண்டுகளில் வெளிவராத அருவி இதழை மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியிட்டதோடு, பல்வேறு ஆளுமைகளின் கட்டுரைகள், சிறுகதை, கவிதைகள் ஆகியவற்றை பிரசுரித்து, அருவி இதழை தமிழ்ச் சங்க நிகழ்வுகளைத் தாண்டி ஒரு இலக்கிய இதழாகவும் பரிமளிக்கச் செய்தேன்.

பேரவை இலக்கியக் குழு உறுப்பினர்(2020-2024). பல்வேறு இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் இலக்கியப் பேருரைகளையும், சிறப்பு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துள்ளேன்.

இவற்றில் முக்கியமான பணிகள் சில:

  • இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல இலக்கிய ஆளுமைகளை அழைத்து வந்து 40க்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களைச் சிறப்பாக நடத்த உதவினேன்.
  • மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்,நாளைய தமிழ் இலக்கியம் நானிலத்தில், இலக்கியத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தியுள்ளேன்.
  • 2020-22 ஆம் ஆண்டுகளில் பேரவை இலக்கியக் குழு பக்கத்தை நிர்வகித்துள்ளேன். 2022-24 ஆம் ஆகிய நான்கு ஆண்டுகளில் பேரவை அருவி குழு பக்கத்தை நிர்வகித்துள்ளேன்.
  • 2021 ஆம் ஆண்டு பேரவை விழாவில் பட்டிமன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தேன்.
  • 2020 முதல் 2023 வரை பேரவை விழா நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, பங்கேற்பாளர் எனப் பன்முகத் திறமையுடன் செயலாற்றி இருக்கிறேன்.

பேரவையின் சமூக ஊடகங்கங்களில் வரும் பல்வேறு அறிவிப்புகளுக்கு தேவையான உள்ளடக்கத்தை சுவைபட, தனித்தமிழில் எழுதி வழங்கி வருகிறேன்.

வட அமெரிக்க வாழ் ஆற்றல் மிகு பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரும் ஆற்றல் மிகு பெண்கள் குழுவிலும் எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன்.

2023 ஆம் ஆண்டு பேரவை மலர் குழுவில் துணைத்தலைமை பொறுப்பினை ஏற்று பேரவை மலரை சிறப்பாக வெளிக்கொணர உதவினேன். பேரவை மலரின் அட்டைப்படம், உள்ளே பல்வேறு ஆளுமைகளிடமிருந்து பெற்ற வாழ்த்துக் கடிதங்கள், மேனாள் பேரவைத் தலைவர்கள் பற்றிய கட்டுரை ஆகியன வெளிவர உதவினேன். 2024 ஆம் ஆண்டு பேரவை மலர் குழுவிலும் உறுப்பினராக சிறப்பாக செயலாற்றியுள்ளேன்.

2024 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்று 37ஆவது பேரவை விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நிகழ தேவையான பங்களிப்பை நல்கினேன்.

பேரவை இலக்கிய வினாடி வினா குழுவின் தலைவராக, சாக்ரமெண்டோ 36ஆவது பேரவை விழாவிலும், சான் ஆண்டோனியோ 37ஆவது பேரவை விழாவிலும் இலக்கிய வினாடி வினாவினை நன்முறையில் ஒருங்கிணைத்தேன்.

சார்லட் இலக்கிய வட்டத்தின் உறுப்பினராக இருந்து பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பங்கேற்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளேன்.

சார்லட் புத்தகக் குழு அமைத்து சார்லட் நகரில் உள்ள நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்களை கிடைக்க முக்கியப் பங்காற்றினேன். கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி நூலகத்தில் வைக்க உதவினேன். இந்தப் பணியினைப் பாராட்டி சார்லட் நகரில் உள்ள மெக்லன்பர்க் நூலகம் ஒரு செய்திக் குறிப்பும் வெளியிட்டுள்ளது.

சார்லட் தமிழ்ப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகத் தன்னார்வத் தொண்டு புரிந்துள்ளேன். எனது மாணவர்களை ஊக்குவித்து அவர்களும் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் எழுதி வெளியிட உதவி புரிந்துள்ளேன். தமிழ்ப் பள்ளியின் கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மட்டுமில்லாமல், நடன ஒருங்கிணைப்பாளராகவும், மேடை நாடக ஆசிரியராகவும், இயக்குநராகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன்.

சார்லட் நகரில், 2021 ஆம் ஆண்டு, முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளேன்.

சார்லட் நகரில் உள்ள ஓங்கு பறைக் குழுவிலும் என்னுடைய பங்களிப்பை அளித்து வருகிறேன்.

2019 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின்(ATA) பத்தாவது ஆண்டு விழா மலர்க் குழுவில் இடம்பெற்று, ஆண்டு மலரை சிறப்பாகத் தொகுத்து வெளியிட்டேன்.

அட்லாண்டா, அமெரிக்காவை மையமாகக் கொண்டு வெளி வரும் வல்லினச் சிறகுகள் என்ற மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இரண்டாண்டு காலம் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டேன்.

உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா குழுவில் உறுப்பினராக இருந்து அதன் இணையதள பக்கத்தை நிர்வகித்திருக்கிறேன்.

வல்லினச் சிறகுகள் மின்னிதழ் முன்னெடுத்த கோவிட் நிதியுதவி குழுவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு மருத்துவமனைக்கு உயிர்வளி செறிவாக்கி கருவியையும், நோயாளிகளுக்கு உணவுக் கொடையும் வழங்கப்பட்டது.

இலக்கியத்திற்கான மகாகவி ஈரோடு தமிழன்பன்-80 விருதினை 2022 ஆம் ஆண்டு பெற்றுள்ளேன்.

சிறந்த கவிதை நூலுக்கான மருத்துவர் அம்பிகாதேவி நினைவுப் பரிசை 2021 ஆம் ஆண்டு பெற்றுள்ளேன்.

தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வழங்கிய "சாதனைப் பெண்கள்" விருதினை 2021 ஆம் ஆண்டு பெற்றுள்ளேன்.

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செயலாளராக நான் செய்ய விரும்பும் பணிகள்:

பேரவை சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பேரவை உறுப்பினர் சேர்க்கை முறையில் உள்ள முரண்கள் களையப்பட்டு அனைத்து சங்கங்களும் பயனுறும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.

கேள்விகள்/உதவிகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் வழங்கப்படும்.

தமிழ்ச் சங்கங்கள் புதுப்பித்தல் மற்றும் அனைத்து கட்டணங்கள் செலுத்தும் முறையில் தானியக்க செயல்முறை(automated process) கொண்டு வரப்படும்.

பேரவை சார்பாக நடைபெறும் விழாக்கள் மற்றும் போட்டிகளில் அனைத்து தமிழ்ச் சங்கங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சமமான வாய்ப்பை பெற்றிடவும், சங்கங்களின் பங்களிப்பை அதிகரித்திடவும் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உறுப்பினர்களுக்கும், சங்கங்களுக்கும் பயனளிக்கும் வகையில் நிதி மேலாண்மை, உயில் மற்றும் அறக்கட்டளை குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாய்நாட்டில் இருக்கும் சொத்துக்களை திறம்பட நிர்வகிக்கவும் உரிய ஆலோசனை வழங்கவும் சிறப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்து நடத்தப்படும்.

⁠தமிழ்நாட்டிலோ அல்லது ஈழத்திலோ நிதி உதவிகள் தேவைப்படும் போது அதற்கான நிதி திரட்டும் திட்டங்களும் முன்னெடுக்கப்படும். பேரவையின் நிதி நிலையை மேம்படுத்திடும் புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.

இருமொழி முத்திரை(Bilingual Seal) பெற்ற மாணவர்கள் மற்றும் வாகை சூடி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பேரவை சிறப்புக் குழுக்கள் சீராக செயல்பட தேவையான உதவிகள் வழங்கப்படும்.

பேரவையின் இலக்கியக் குழுக்களின் வழி

  • பல்வேறு நாடுகளைச் சார்ந்த சிறந்த இலக்கிய ஆளுமைகளுடனான நிகழ்ச்சிகளைத் தொடரப்படும்.
  • புதுமையான இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும்.
  • சங்க இலக்கிய பாடல்களை பரவலாக்கும் நோக்கத்தோடு சங்க இலக்கிய பாடல்களை இசையோடு வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
  • பெண் இலக்கிய ஆளுமைகள், இளையோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
  • தமிழிசை மற்றும் நாடகத் தமிழ் சார்ந்த செயல்பாடுகள் அதிகப்படுத்தப்படும்.

நலிந்த தமிழ்க் கலைஞர்களின் வாழ்வாதாரம் செழிக்க புதிய திட்டங்களைத் தீட்டி அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.

இளையோரின் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்படும்.

தமிழால் இணைவோம்!! தமிழைத் தரணிப் போற்றிடச் செய்திடுவோம்!!